வேளாண்மைப் பொறியியல் துறை நிர்வாக அமைப்பு
 
 
 
 
தலைமையிடம்
 
 

வேளாண்மைப் பொறியியல் துறை ஒரு தலைமைப் பொறியாளரின்கீழ் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. பொது நிர்வாகம், பணியாளன் நலன், துறையின் செயல்பாட்டினை திட்டமிடுதல் மற்றும் நெறிப்படுத்துதல், வரவு செலவு திட்டம், கணக்குகள், தணிக்கை, துறையின் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தலைமைப் பொறியாளரைச் சாரும். மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், பாசனப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை நிர்வகிக்கத் தனியே ஒரு தலைமைப் பொறியாளர், நதிப்பள்ளத்தாக்குத்திட்டம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறார்.

 
மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகம்
 
 

வேளாண்மைப் பொறியியல் துறையினை சிறப்பாக நிர்வகிக்கும் பொருட்டு, மாநிலத்தில் 11 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு கண்காணிப்புப் பொறியாளர் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. மாவட்ட அளவில் வேளாண்மைப் பொறியியல் திட்டங்கள் செயற் பொறியாளர் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. வருவாய் கோட்ட அளவில் ஒரு உதவி செயற் பொறியாளர் தலைமையில் வேளாண்மைப் பொறியியல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

 
சிறப்பு திட்டங்கள்
 
 

நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பாசனப்பகுதி மேம்பாடு திட்டம் ஆகிய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திட தனியே செயற் பொறியாளர்கள் கோட்ட அலுவலர்களாக அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 
வேளாண்மை பொறியியல் பயிற்சி நிலையம்.
 
 

வேளாண்மைப் பொறியியல் துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு துறையின் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களிலும் பயிற்சி அளித்திட வேளாண்மைப் பொறியியல் பயிற்சி நிலையம் ஒன்று திருச்சியில் இயங்கி வருகிறது. இப்பயிற்சி நிலையம் செயற் பொறியாளரின் தலைமையில் இயங்கி வருகிறது.

 
டிராக்டர் பணிமனைகள்.
 
 

இத்துறையிலுள்ள இயந்திரங்களின் பராமரிப்புப் பணிகள், பழுதுபார்த்தல், ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாட்டில் திருச்சி, திருவாரூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய ஆறு இடங்களில் டிராக்டர் பணிமனைகள் உள்ளன. ஒவ்வொரு பணிமனையும் ஒரு உதவி செயற் பொறியாளர் தலைமையில் இயங்கி வருகிறது.

 
மத்திய பண்டகசாலை.
 
 

இயந்திரங்களுக்கான எரிபொருள், மசகு எண்ணெய், உதிரி பாகங்கள் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக வாங்கி மாவட்டங்களுக்கு வழங்கிடும் பொருட்டு ஒரு மத்திய பண்டகசாலை செயற்பொறியாளரின் தலைமையில் சென்னையில் இயங்கி வருகிறது.