வேளாண்மை இயந்திரமயமாக்குதல்
 

பண்ணை வேலையாட்கள் பற்றாக்குறையினால் பண்ணைப் பணிகளை விவசாயிகள் குறித்த காலத்தில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, நவீன வேளாண்மையில் "வேளாண்மை இயந்திரமயமாக்குதல்" தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவையாக உள்ளது. போதிய பண்ணைசக்தியும், திறன் வாய்ந்த பண்ணை இயந்திரங்களின் பயன்பாடும், நிலம் தயார் செய்தல் முதல் அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் வரை உள்ள அனைத்து பணிகளிலும் உள்ள கடினமான வேலைப்பளுவினை களைவதோடு மட்டுமின்றி, விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய இடுபொருட்களை திறம்பட பயன்படுத்தவும் வழிவகுக்கிறது. பண்ணையின் வேளாண் உற்பத்தி என்பது பண்ணையில் கிடைக்கக்கூடிய பண்ணைசக்தியின் அளவினையும், அவற்றின் பயன்பாட்டினையும் சார்ந்தே உள்ளது. அதிக அளவு பண்ணைசக்தி கிடைக்கக்கூடிய மாநிலங்களில் வேளாண் உற்பத்தித்திறன் அதிகமாக உள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கலினால் மட்டுமே, பண்ணைப் பணியாளர் பற்றாக்குறையினை எதிர்கொள்ள முடியும். வேளாண்மையில் பழு அதிகமாக உள்ளதால், படித்த இளைஞர்கள் வேளாண்மைத் தொழிலில் இறங்கத் தயங்குகிறார்கள். தமிழகத்தில், கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு பணியாளர்கள் இடம்பெயர்வது அதிகளவில் நடைபெறுகிறது. பண்ணை பணியாளர்கள் தேவை மற்றும் இருப்புக்கு இடையிலான இடைவெளியினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதில் வேளாண் இயந்திரமயமாக்கல் மிகவும் உதவிகரமாக உள்ளது. டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்குத் தேவையான அளவு கிடைத்தால்தான், உணவுதானிய உற்பத்தி உயர்வு என்பது சாத்தியம்.

தனிப்பட்ட விவசாயிகள் / விவசாயிகள் குழுக்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக, 2011-12 ஆம் ஆண்டில், பல்வேறு பயிர் சார்ந்த 3,438 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வாங்கப்பட்டு, 1283 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.2536.50 இலட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்

பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், நாற்று பையில் மண் மற்றும் இதர இடுபொருட்களை நிரப்பும் இயந்திரம், குழி தோண்டும் கருவி, விதைக்கும் கருவி, மரக்கிளை கவாத்து செய்யும் கருவி, டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயக்கும் கருவிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் மூலம், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, வழங்கப்பட உள்ளன.

இதன் மூலம் விவசாயிகள் விதைப்பு, நடவு, களையெடுத்தல், பயிர்பாதுகாப்பு மற்றும் அறுவடை போன்ற பணிகளை காலத்தே மேற்கொண்டு பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தலாம். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் தற்போது நிலவிவரும் வேலையாட்கள் பற்றாக்குறை பெரிதும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

2011-12 ஆம் ஆண்டில் 8,593 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட விவசாயிகளுக்கு மானியமாக ரூ.2,704.47 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் 90,931 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் நாற்றங்கால் தயாரிக்க உதவும் தட்டுகள் வாங்கிட விவசாயிகளுக்கு மானியமாக ரூ.7,431.11 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 39,740 எண்கள் நாற்றங்கால் தயாரிக்க உதவும் தட்டுகள் மற்றும் 14,343 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட விவசாயிகளுக்கு ரூ.4799.82 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் 10653 எண்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட விவசாயிகளுக்கு ரூ.2999.67 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குழு அமைத்து விலையில்லா வேளாண் இயந்திரங்கள் வழங்கி பயிற்சி அளித்தல்

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் குழுக்கள் அமைத்து வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான பயிற்சி அளித்து வேளாண் இயந்திரங்கள் வழங்க அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 59 விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு, 360 வேளாண் இயந்திரங்கள் ரூ.352.46 இலட்சம் செலவில் வழங்கப்பட்டு, வேளாண் இயந்திரங்கள் பராமரிப்புப் பயிற்சிகள் ரூ.18.65 இலட்சம் செலவில் நடத்தப்பட்டன.

2014-15ஆம் ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தலா 200 எண்கள் நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் மற்றும் நெல் வயலில் களையெடுக்கும் கருவி முதலிய இயந்திரங்கள் முறையே ரூ.392.20 இலட்சம் மற்றும் ரூ.48.40 இலட்சம் தொகையில் வாங்கப்பட்டு வேளாண்மை துறையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி மற்றும் அரியலுhர் முதலான டெல்டா மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட விவசாயக் குழுக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

நவீன வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல் விளக்கம்

புதிதாக உருவாக்கப்பட்ட உயர் படுக்கையில் விதையிடும் இயந்திரம், லேசர் சமன் செய்யும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, டிராக்டரால் இயங்கும் இலைகளைப் பொடியாக்கும் இயந்திரம், என்ஜினால் இயங்கும் நாற்று நடவு செய்யும் இயந்திரம், விசைக்களையெடுக்கும் கருவி, உழவில்லா விதைப்புக்கருவி, மஞ்சள் அறுவடை செய்யும் கருவி, டிராக்டரால் இயங்கும் இரண்டு வரிசை மஞ்சள் அறுவடை செய்யும் கருவி போன்ற நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கம் செய்து காண்பித்து விவசாயிகளிடையே பிரபலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், செயல்விளக்கத்திற்காக நவீன பண்ணைக் கருவிகள் ரூ.13.66 இலட்சம் செலவில் வாங்கப்பட்டு, 1041 செயல் விளக்கங்கள் ரூ.31.29 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல் விளக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் 371 செயல்விளக்கங்கள் செய்து காண்பித்திட ஏதுவாக ௹ 11.12 லட்சம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்

வேளாண்மையின் பல்வேறு பணிகளுக்கும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அவசியமாகிறது. இதற்காக நெல் மற்றும் கரும்பு சாகுபடிக்கு ஏற்ற வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள், பயிர் பாதுகாப்புக் கருவிகள், மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற பண்ணைக் கருவிகள், தண்ணீரை சிக்கனமாகப்பயன்படுத்த உதவும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் பற்றிய பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்படுவதோடு, வேளாண்மை இயந்திரமயமாக்குதல் தொடர்பான விழிப்புணர்வும் விவசாயிகளிடையே ஏற்படுத்தப்படும். 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 240 பயிற்சி வகுப்புகள் ரூ.67.02 இலட்சம் செலவில் நடத்தப்பட்டுள்ளன.

கிராமப்புற இளைஞர்களுக்கு நவீன வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை

இயக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி பொதுவாக பயன்படும் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும் தொழில் நுட்ப வேலைத்திறன் தெரிந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே சமயம், உயர் தொழில் நுட்பமுள்ள, விலை உயர்ந்த, அதிக செயல் திறனுடைய வேளாண் இயந்திரங்களும் கருவிகளும் விவசாயிகளிடையே பிரபலமாகி வருகிறது. கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகளிடையே தொழில் நுட்பத்திறனை ஏற்படுத்திடும் வகையில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மூன்று மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பான பயிற்சி 2011-12 ஆம் ஆண்டிலிருந்து திருவாரூர், வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் பணிமனைகளில் 544 பயிற்சிகள் ரூ.69.64 இலட்சம் செலவில் நடத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பேரியல் மேலாண்மையின்கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாட்டினை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசின் பேரியல் மேலாண்மைத்திட்டத்தின்கீழ் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் (90 : 10 என்ற அடிப்படையில்) வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் டிராக்டர், பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் வாங்கிட மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் டிராக்டர், பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் உட்பட, 3946 வேளாண்மை இயந்திரங்களையும் கருவிகளையும் விவசாயிகள் வாங்கிட ரூ.1628.57 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பேரியல் மேலாண்மைத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, வேளாண் இயந்திரமயமாக்கும் உப இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண் இயந்திரமயமாக்கும் உப இயக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம்

வேளாண் இயந்திரமயமாக்கும் உப இயக்கத் திட்டத்தின் கீழ், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் 2014-15 ஆம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்கேற்பாக 100:0 மற்றும் 75 : 25 என்ற விகிதத்தில் அந்தந்த இனங்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு 50:50 என்றவாறு 2015-2016 ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை ஊக்குவிக்கவும், பண்ணை சக்தி குறைவாக உள்ள பகுதிகளுக்கும் பயன் அளிக்கும் வகையிலும், உயர் தொழில் நுட்ப, விலையுயர்ந்த மற்றும் அதிக உற்பத்தித் திறனுள்ள வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் பண்ணை இயந்திரங்கள் மையங்கள் மூலம் வழங்கி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் வேளாண் இயந்திரமயமாக்குதலை பிரபலப்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இவ்வியக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் பின்வருவன.

  1. பயிற்சி, பரிசோதனை மற்றும் செயல்விளக்கம் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்து வலுப்படுத்துதல்.
  2. அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த செயல் விளக்கம், பயிற்சி மற்றும் இயந்திரங்கள் விநியோகம்.
  3. வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கு கொள்முதல் செய்வதற்கு நிதி உதவி.
  4. பண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி, வாடகைக்கு வழங்குதல்
  5. உயர் தொழில்நுட்ப, விலையுயர்ந்த இயந்திரங்களை மையங்கள் மூலம் பெற்று, வாடகைக்கு வழங்குதல்
  6. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வேளாண் இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல், மற்றும்
  7. வாடகைக்கு வழங்கும் மையங்கள் மூலமாக வயல்களில் மேற்கொள்ளப்படும் இயந்திரப் பணிகளுக்கு எக்டருக்கு மானியம் என்ற முறையில் நிதிஉதவி வழங்கி ஊக்கப்படுத்துதல்.

இத்திட்டத்தின் கீழ் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நெல் நடவு செய்யும் இயந்திரம், சிறப்பு வகையான தானியங்கி இயந்திரங்கள், தானியங்கி தோட்டக்கலை இயந்திரங்கள், 20 குதிரை சக்தி திறனுக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர்டில்லரால் இயங்கும் பண்ணைக் கருவிகள், 20 க்கும் மேல் 35 குதிரை சக்தி திறனுக்கு உட்பட்ட டிராக்டரால் இயங்கும் பண்ணை கருவிகள், 35 குதிரை சக்தி திறனுக்கு மேற்பட்ட டிராக்டரால் இயங்கும் பண்ணை கருவிகள், மனிதன் மற்றும் கால்நடைகளால் இயக்கப்படும் கருவிகள், இயந்திரங்கள், பயிர் பாதுகாப்பு கருவிகள், இதர வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வாங்கிட மானியமாக வழங்கப்படும். 2014-15ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ்,1.)வேளாண் இயந்திரங்கள் பரிசோதனை மையத்தினை திருச்சி மாவட்டத்திலுள்ள குமுழூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்திட ஏதுவாக ரூ.135.00 லட்சம், 2.) விவசாயிகள் டிராக்டர் கொள்முதல் செய்வதற்கு மானியம் வழங்கிட ஏதுவாக ரூ.295.00 லட்சம் மற்றும், 3.) பண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி வாடகைக்கு வழங்கிட ஏதுவாக ரூ.650.00 லட்சம் என மொத்தமாக 1080.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி வாடகைக்கு வழங்குதல். (ரூ.25.00 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீடு)

பண்ணைத் தொழிலில் சிறந்த வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்களை நிறுலி சேவை செய்திடவும், விவசாயிகள் பெரிய இயந்திரங்களை வாங்கிட பெரும் முதலீடுகள் செய்வதை குறைக்கவும், தமிழ்நாட்டில் வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

2014-15ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.25.00 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீடுகளைக் கொண்ட, 65 வாடகைக்கு வழங்கும் மையங்களை ஏற்படுத்திட வேளாண் இயந்திர மயமாக்கும் உப இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.650.00 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடர்ந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அதன் மொத்த தொகையான ரூ.25.00 லட்சத்தில் 40% மானியமாக ரூ.10.00 லட்சம் அதிகபட்ச மானியம் என்ற வரையரைக்குட்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 60% தொகையான ரூ.15.00 லட்சத்தினை பயனாளிகள் குழுக்கள் தங்களின் பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.

விவசாயிகளின் நிலங்களில் பருப்பு மற்றும் சிறுதானிய இயந்திரங்களின் செயல்விளக்கம்

அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி மேலாண்மையில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கவும், சேமிப்புக்காலங்களில் அழுகும் வேளாண் விளைபொருட்களின் சேதாரங்களைக் குறைக்கவும், வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதில் தற்போதைய புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி அவற்றின் தரத்தினை நிலைநிறுத்தவும், விவசாயிகளிடையே புதிய தொழில் நுட்பங்களை அமல்படுத்திடவும் அவற்றினை மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்திடவும், சிறிய, நடுத்தர, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின, பெண்கள் மற்றும் இதர விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை திட்டம் மத்திய அரசின் 100 சதவிகித பங்களிப்புடன் 2013-2014-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2014-15-ஆம் ஆண்டில் பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம், மக்காச்சோளம் பிரித்தெடுக்கும் இயந்திரம் மற்றும் சிறிய பருப்பு உடைக்கும் கருவி ஆகியவற்றினை கொள்முதல் செய்து விவசாயிகளிடையே பிரபலப்படுத்திட ஏதுவாக ரூ. 186.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டபிறகு குறைந்தது 12 மாதங்கள் கழித்து இக்கருவிகளை சுய உதவிக்குழு/டான்வேப்குழு/பயனாளிகள் குழு/விவசாயிகள் குழு/ நீரினைப்பயன்படுத்துவோர் சங்கம்/விளைபொருள் குழு ஆகியவற்றிற்கு 50 சதவிகித அடிப்படை விலையில் மானியமாக வழங்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல்.

2014-15ஆம் ஆண்டில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் இயந்திரமயமாக்குதலில் ஊக்குவித்தல் திட்டத்திற்காக ரூ.410.00 இலட்சம் வழங்கப்பட்டு ரூ.409.92 இலட்சம் மானியமாக செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கிராமப்புற இளைஞர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள்/கருவிகள் வழங்கி, பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் அதிகப்படியான விவசாய நிலங்கள் வேளாண்மை இயந்திர மயமாக்குதலின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இந்த இளைஞர் குழுக்கள் வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கும். இதற்காக 80 சதவிகித மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8.00 லட்சம்வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது.