விவசாயிகள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்
   
   
மண் வளப் பாதுகாப்பு பணிகள் - ஒருகிணைந்த மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம்
 • இத்திட்டத்தில்கீழ் தனிப்பட்ட மலைவாழ் மக்கள் விவசாய நிலங்கள் மேம்படுபத்தபடுமா ?
ஆம் . இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைவாழ் கிரமங்களில் உள்ள பழங்குடியினர் விவசாய நிலங்களில் தேவைக்கேற்ப நிலம் சமன் செய்தல் . சம உயர கல் சுவர் /சமதள ஆதார சுவர் அமைத்தல், பாசன நீராதாரம் உள்ள நிலங்களுக்கு தேவைப்படினர் பி.வி.சி. குழாய் அமைத்துக் கொடுத்தல் போன்ற பணிகள் செயல்படுகிறது .
 • பழங்குடியினர் விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் வழங்கபடுகிறது ?
இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளும் 100% மானியத்தில் செயல்படுத்தபடுகிறது.
 • இத்திட்டத்தில் பயனடையக்கூடிய கிராமங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கபடுகிறது ?
இத்திட்டம் ஜவ்வாதுமலை, கொல்லிமலை, சித்தேரிமலை, கல்ராயன்மலை, அருநூத்துமலை, சேர்வராயன் மலை மற்றும் பச்சைமலை ஆகிய மலைபகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இம்மலை பகுதிகளில் பழங்குடியினர் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமங்களை உள்ளடக்கிய நீர்வடிப்பகுதிகளில், மலைமுகட்டிலிருந்து பள்ளத்தாக்கு வரையான (Ridge to valley approach) அடிப்படையில் அதிகளவில் பாதிப்புள்ள நீர்வடிப்பகுதிகளில் குறிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதிக்கேற்ப அந்த கிராமங்களில் தேவையான மண்வள பாதுகாப்புப் பணிகள் ஒரே ஆண்டில் முழுமையாகவோ அல்லது பகுதிகளாக பிரித்து இரண்டு மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும் .
சூரிய கூடார மிளகாய் உலர்த்தி
 • இத்திட்டத்தில் அமைக்கப்படும் மிளகாய் உலர்த்தியில் எவ்வளவு கொள்ளளவு மிளகாய் உலர்த்த முடியும்?
சுமார் 75 கிலோ மிளகாய் ஒரே நேரத்தில் உலர்த்த முடியும்.
 • எத்தனை நாட்களுக்கு இதில் உலர்த்த வேண்டும்?
இக்கூடார உலர்த்தியில் காய வைக்கப்படும் மிளகாய் 3லிருந்து 4 நாட்களுக்கு உலர்ந்து விடும்.
 • இந்த சூரிய கூடார மிளகாய் உலர்த்தியில் ட்ரே அடுக்குகளில் மிளகாயை உலர்த்தலாமா?
இத்திட்டத்தில் அமைக்கப்படும் சூரிய கூடார மிளகாய் உலர்த்தியில் ஒன்றன் மீது ஒன்றாக ட்ரேகளில் மிளகாயை காய வைத்தால் சரியாக உலராது. கூடாரத்திற்கள் கறுப்பு நிற பாலத்தீன் ஷீட்டுகளிலோ அல்லது தரையிலோ அல்லது தட்டுகளில் ( கறுப்பு தட்டுகள் உகந்தவை) நேரடியாக உலர்த்துவதே சரியானதாகும்.
 • தனிப்பட்ட விவசாயிக்கு ஏற்றவாறு சிறிய அளவில் அமைத்து கொடுக்கப்படுமா?
இல்லை. இத்திட்டத்தில் மிளகாய் விளைவிக்கும் விவசாயிகளை சிறு குழுக்களாக இணைத்து ஒரு குழுவிற்கு ஒரு சூரிய கூடார மிளகாய் உலர்த்தி 100% மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்படும்.
 • பராமரிப்பு செலவினை அரசு ஏற்குமா?
இல்லை. மிளகாய் உலர்த்தியில் பரமாரிப்பு அந்தந்த குழுக்களாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். குழு உறுப்பினர்களிடம் மேற்படி மிளகாய் உலர்த்தியின் பயன்பாட்டிற்காக ஒரு சிறிய தொகையினை வாடகையாக நிர்ணயித்து அந்த வாடகை வருமானம் மூலம் பராமரிப்பினை குழுவானது மேற்கொள்ள இயலும்.
 • சூரிய கூடார மிளகாய் உலர்த்தியினால் எந்தளவு அதிக வருவாய் பெறமுடியும்?
இம்மிளகாய் உலர்த்தியில் மிளகாய்களை காயவைப்பதன் மூலம் ஒத்த நிறமுடைய காரத்தன்மை குறைவுபடாத மிளகாய்களை பெற முடிவதால் சந்தையில் கிலோவிற்கு ரூ. 5/- வரை அதிக விலை பெறமுடியும். மேலும் குறைந்த நேரத்தில் மிளகாயினை காய வைக்க முடிவதால், வேலை நாட்களும் கணிசமாக மிச்சமாகிறது.
 • இம்மிளகாய் உலர்த்தியில் வேறு பொருட்களை காய வைக்க முடியுமா?
ஆம். கொப்பரை தேங்காய் உள்ளிட்ட நேரடி வெயிலில் காய வைக்கக் கூடிய இதர பொருட்களை மிளகாய் உலர்த்தாத காலங்களில் காய வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
விவசாயிகளிடம் இருந்து துறைக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
 • ஓடை புறம்போக்குகளில், வீணாக போகும் மழை நீர் மற்றும் மண் அரிமானத்தை காக்கும் பொருட்டு தடுப்பணைகள் கட்டித் தரப்படுமா?
ஆம், ஓடை புறம்போக்குகளில் வீணாக போகும் மழைநீரினை தேக்கி வைத்து கொள்ள ஏதுவாக தடுப்பணைகள் கட்டித் தரப்படும்.
 • தடுப்பணைகள் பட்டா ஓடைகளில் அமைத்து தரமுடியுமா?
ஆம், தங்கள் நிலத்தினை அரசுக்கு தானக் கிரையம் செய்து தரும் பட்சத்தில் கட்டி கொடுக்கப்படும்.
 • பட்டா நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து தரமுடியுமா?
ஆம் 30 xxx 30 x15 மீட்டர் என்ற அளவில், மதிப்பிட்டில் 5% தங்கள் பங்களிப்பு தொகை கட்டினால் அமைத்து தரப்படும்.
 • பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட உள்ள நிலத்தினை தனக்கிரயம் செய்ய வேண்டுமா?
தேவை இல்லை.
 • பண்ணை குட்டைகளில் மீன் வளர்க்க ஆவண செய்யப்படுமா. அதற்கு மான்யம் ஏதேனும் உண்டா?
தங்கள் பகுதிகளில் உள்ள மீன் வளத் துறையினை அணுகினால் அந்த துறை அமைத்து தரும்.
 • பண்ணைக்குட்டைகளில் இருந்து நீர் பாசன வசதிகள் அமைக்கப்படுமா?
நீர்பாசனத்திற்காக டீசல் பம்பு, மழைத்துவான் அல்லது தெளிப்பு நீர் பாசன கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் அளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது.
 • தரிசு நிலங்களை மேம்படுத்த ஏதேனும் வழி முறைகள் உண்டா?
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், நிலம் சமன்படுத்துதல் உரிய முறையில் மற்றும் நிலத்தை பண்படுத்த ஆகும் செலவில் 50% மான்யம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்
 • வேளாண்மை பொறியியல் துறையில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் விவரங்களை தெரிவிக்கவும்?
வேளாண்மை பொறியியல் துறையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சராசரி அலகுத்தொகையில் 50 சதவிகித மானியம் அல்லது அரசால் அதிகப்பட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அலகுத்தொகை என்ற அடிப்படையில் வேளாண்மைக்கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
 • வேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களை வாங்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றி தெரிவிக்கவும்?
வேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களை வாங்க விரும்பும் விவசாயிகள் தங்களது விண்ணப்பத்தில் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் / அலைபேசி எண், கிராமம், வட்டாரம் விபரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகாரம் செய்யப்பட்ட வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள், அவற்றினை வழங்குகின்ற நிறுவனங்களின் பெயர், விவசாயக் கருவிகள் மற்றும் இயந்திரங்களின் மாடல் ஆகிய விபரங்களை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற புல எண் வரைபடம், சிட்டா மற்றும் அடங்கல், குடும்ப அட்டையின் உண்மைநகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், டிராக்டரால் இயங்கும் உளிக்கலப்பை, கொத்துக் கலப்பை போன்றவற்றினை மானிய விலையில் பெற்றிட ஏதுவாக டிராக்டரின் பதிவுச் சான்று (Registration Certificate) மற்றும் டிராக்டரின் எப்.சி சான்று (Fitness Certificate) ஆகியவற்றின் உண்மை நகலினையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன வகுப்பினராயின் சாதிச் சான்றின் உண்மை நகலினையும் இணைக்க வேண்டும்.
 • வேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மானியம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
வேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகள் முன்னுரிமை (Seniority) அடிப்படையில் பெற்றிட ஏதுவாக வேளாண்மைப் பொறியியல் துறையின் ஒவ்வொரு உபகோட்டத்திலும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்திற்கென முன்னுரிமைப் பதிவேடு (Priority Register) பராமரிக்கப்படுகிறது. முதலில் விண்ணப்பித்தோர்க்கு முதலில் மானியம் என்ற அடிப்படையில் முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசால் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், உபகோட்ட மற்றும் மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள மற்றும் மாவட்டங்களில் பயிராகும் பயிர்களின் அடிப்படையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயியின் முறை (Turn) வரும்பொழுது அவருக்கு 10 முதல் 20 நாட்களுக்குள் அங்கீகாரம் செய்யப்பட்ட கருவிக்கு மானியத் தொகையினை கழித்து மீதத் தொகை அதாவது விவசாயிகளின் பங்களிப்புத் தொகையினை அங்கீகாரம் செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் கேட்புக் காசோலையாக (Demand Draft) எடுத்து அந்தந்த உபகோட்ட அளவிலான உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தில் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். அவ்வாறு விவசாயிகள் கேட்புக் காசோலையினை வழங்கிடத் தவறும் பட்சத்தில் அவர்களது முன்னுரிமை ரத்து செய்யப்பட்டு அடுத்த வரிசையிலுள்ள விவசாயிக்கு சென்று விடும். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கேட்புக் காசோலையினை இணைத்து சம்பந்தப்பட்ட விவசாயிக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மைக் கருவிகள் அல்லது இயந்திரங்களை வழங்கிட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கோரும் பணி ஆணை சம்பந்தப்பட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) களால் வழங்கப்படும். மேற்படி நிறுவனம் விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மைக் கருவிகள் அல்லது இயந்திரங்களை வழங்கிய பின்னர் அதனை உறுதி செய்து அந்நிறுவனத்திற்கு மானியத் தொகை விடுவிக்கப்படும்.
 • வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றினை பற்றிய தகவல்களை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?
வேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பற்றிய செயல்விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிலங்களில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் செயல் விளக்கம் நேரிடையாக செய்து காண்பிக்கப்படுகிறது. மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கருவிகளை கையாள்வதில் மற்றும் பராமரித்தலில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமும் ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவிலான உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அனைத்து தரப்பு விவசாயிகளும் கலந்து கொண்டும், பயிற்சி பெற்றும் பயன் பெறலாம்.